Background: பிற்புலமும் வரலாறும்
Background என்பதற்கு எல்லாநிலைகளிலும் பிற்புலம் அல்லது பிற்புலம் என்பது இப்பொழுது பெருகிவருகிறது.
ஆனால் அதுவும் ஒரு ஆங்கிலச் சிந்தனைப்பெயர்ப்பாகும்; அதாவது ஆங்கிலச்சொல்லை அது குறிக்கும் கருத்தை நேரடியே பெயர்க்கும் பிழையாகும்.
எடுத்துக்காட்டாக:
“இதை அவருடைய பிற்புலம் தெரிந்தால்தான் முழுதும் உணரமுடியும்” என்றுசொல்வதில் காணலாம்
அது “”One can realize this only if one knows his background” என்பதைச் சொல்லமுயல்கிறது. அது செயற்கையாக ஒலிப்பதைப் பலரும் உணரக்கூடும். ஏனென்றால் பிற்புலம் என்பது இந்த நிலைமைக்கு இயல்பான தமிழ்க்கருத்து அன்று; இதையே வேறுவகையில் சொல்லிவந்திருக்கிறோம்; இன்றும் ஆங்கிலத் தொடர்பில்லாதவர்கள் வேறுவகையில் சொல்லுவார்கள். அதை மறந்து போய் ஆங்கிலச்சொல்லை நேரடியாக மொழிபெயர்த்ததால் விளைந்த விளைவு மேற்கண்ட வாக்கியம்.
இதை முழுதும் உணர ஆங்கிலச்சொல்லை ஆராய்வோம்.
background என்னும் ஆங்கிலச் சொல் பொதுவாக இரண்டு பொருள்களில் வழங்கும்.
(1) இடம்தொடர்பான பொருள்
(2) ஆட்களுக்கோ சிலநிகழ்ச்சிகளுக்கோ இதுவரை நேர்ந்தது
http://www.answers.com/topic/background
- The ground or scenery located behind something.
-
- The part of a pictorial representation that appears to be in the distance and that provides relief for the principal objects in the foreground.
- The general scene or surface against which designs, patterns, or figures are represented or viewed.
- The circumstances and events surrounding or leading up to an event or occurrence.
- A person’s experience, training, and education: Her background in the arts is impressive.
முதலிரண்டும் பிற்புலம், பின்னணி ஆகிய பொருள் கொண்டவை. பின்னவை அப்படியில்லை. அவை இதுவரை நடந்துள்ளதைப்பற்றிச் சொல்லும் குறிப்புடையவை. அவற்றை உணர்த்தத் தமிழ்மொழியில் ஆங்கிலச் சொல்லை நேரடியாகப்பெயர்த்தால் சிறக்காது. பொருளை உணர்ந்து ஏற்கனவே தமிழ்மொழியில் உள்ள சொல்லைச் சொல்லவேண்டும். அது வரலாறு, வரல்முறை போன்ற சொற்களால் அமையும்.
ஆகவே “his background” என்பதற்கு அவருடைய வரலாறு என்று சொல்லவேண்டும்.
ஆனால் “படம்பிடிக்கும்பொழுது அழகான பிற்புலம் தேவை” என்பது தகும்; ஏனென்றால் அது உண்மையான பொருள்களின் இடம் சார்ந்த கருத்து.
“One can realize this only if one knows his background” = “அவருடைய வரலாறு தெரிந்தால்தான் இதை முழுதும் உணரமுடியும்”
“I would like to describe in this essay the background to the genocide of Tamil Eelam”
“ஈழத்தாருக்கு இழைத்த இனப்படுகொலையின் வரலாறு என்னவென்று இந்தக் கட்டுரையில் தெரிவிக்க விரும்புகிறேன்”.
மேலும் ஆங்கிலத்திலும் முடிந்தவரை நேரடிப்பொருளுடைய சொற்களை வழங்குவது நமக்கும் நல்லது.
இயலும் வரை background என்ற சொல்லுக்கு ஈடாக history என்ற சொல்லை வழங்கினால் சிறக்கும்.
ஆங்கிலத்தில் சட்டென்று எந்தச்சொல்லையும் இன்னொரு பொருளுக்குச் சார்த்திச் சொல்லும் வழக்கம் உள்ளதால் சொல்லினோசை மட்டும் ஒத்திருக்கும்; ஆனால் குறிப்பு வெகுவாக மாறியிருக்கும்.
ஆனால் தமிழ்மொழியிலோ மற்ற உலகமொழிகளிலோ அப்படிச் செய்ய இசைவதில்லை ; அதெபோல் தமிழ்மொழ்யிலிருந்து எல்லாச்சொல்லையும் பச்சையாக ஆங்கிலத்துக்கும் பெயர்க்கமுடியாது; பொருளுணர்ந்துதான் செய்யமுடியும்; இல்லாவிட்டால் மாறுபட்டு ஒலிக்கும். இப்படி எண்ணிப்பார்க்காமல் மொழிபெயர்த்தால் நம்முடைய ஆராயும் திறமையையும் போக்கிவிடும்.
மிகப் பயனுள்ள செய்தி.