பொன்னியின் செல்வனைச் சரியாகச் சொல்வது எப்படி?

பெரியண்ணன் சந்திரசேகரன்

perichandra@perichandra

[இவ்வாசிரியரின் மொழியியற் பிற்புலம்: Pleonastic Compounding: An Ancient Dravidian Word Structure | Electronic Journal of Vedic Studies]

பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கும் இந்தத் தறுவாயில் அதன் பெயரைச் சரியாகச் சொல்வது எப்படி என்று இங்கே சான்றோடு காண்போம்.

அதாவது இராசராசச் சோழனே எப்படிப் பேசியிருப்பான் என்பதே இது.

உடனடி விடை: பொன்னியின்ஜெல்வன் அல்லது பொன்னியிஞ்ஜெல்வன் என்பதே!

ஆமாம் செல்வன் என்பதன் செகரத்தை ஜெகரமாக ஒலிப்பதே திருத்தமான ஒலிப்பாகும்.

[கவனிக்கவும்: (1) சொல் முதலிலும் இரட்டித்து வரும்பொழுதும் சகரத்தை ch என்று ஒலிக்கவேண்டும்; s என்று ஒலிக்கக்கூடாது; அதற்குத்தான் ஸ என்ற இரந்த எழுத்து உள்ளது!. ஆகவே செல்வன் என்பதை chelvan என்னவேண்டும்; அந்த ஒலிப்பே சகரன் இப்படி ஜகரமாக ஒலிமாற அடிப்படைக்காரணம்;  

(2) தமிழில் ஜகர ஒலி உண்டு; ஆனால் அது தனிச் சொல்லின் தொடக்கத்தில் இல்லை; ஹகர ஒலியும் அப்படியே: பகல் என்பதில் பஹல் என்னும்பொழுது அதனைக் கவனிக்க! தொல்காப்பியர் ச-ஜ க-ஹ போன்ற சோடிகளை இன்றைய மொழியியலாரும் வியக்கும்படி ஒரே எழுத்தாக (phoneme) ஆக வகுத்தார்.

3) எழுதியிருப்பது பேசவேண்டிய ஒலிப்புக்களை முற்றிலுங் காட்டாது:

“பழம் கிடைக்கும்” என்று எழுதியிருந்தாலும் “பழங்கிடைக்கும்” என்றே ம் என்பதை ங் என்ற ஒலியாக்கி வாசிக்கவேண்டும்; அதுதான் செந்தமிழ்ப் பேச்சு. இடைவெளி விட்டிருந்தாலும் கூட்டியே வாசிக்கவேண்டும்.]

இதற்கு நேரடிச் சான்றுகள் நன்செய் (நஞ்சை),  புன்செய் (புஞ்சை). அவற்றை நஞ்ஜை,  புஞ்ஜை என்று இன்றும் ஒலிப்பதைக் கவனிக்கவும்.

  செய் அதாவது வயலென்று பொருள்படுஞ்சொல்லை நன், புன் என்ற சொற்களோடு கூட்டிச் சொல்லும்பொழுது சகரம் ஜகரமாக மெலிந்து ஒலிக்கும். அதற்குக் காரணம் அந்தச் சொற்களின் ஈற்றிலுள்ள ன் என்ற ஒலியே. அதன்படிச் சகரன் ஜகரமாக ஒலிக்கும்: நன்ஜெய், புன்ஜெய் என்று; அவையே பிறகு நஞ்ஜெய், புஞ்ஜெய் என்று ஆகி இறுதியாக நஞ்ஜை,  புஞ்ஜை என்று சிதைந்தன.

எவன் சொன்னான் என்பதை எவஞ்சொன்னான் அதாவது எவஞ்ஜொன்னான் என்று மக்கள் பேசுவது இன்னுமுண்டு.

எஞ்சாமி” (எஞ்ஜாமி) என்பதும் “ என் சாமி” என்பதன் உச்சரிப்பே என்பதைக் கவனிக்க. 

சாமி என்பதை ஸாமி என்று தனியே சொல்பவர்கள்கூட “என்சாமி என்று தொடராகப் பேசும்பொழுது எஞ்சாமி என்பதைக் கவனிக்க. இங்கே சகரம் ஜகரமாவது கவனிக்கவேண்டியது. என் என்ற சொல்லின் ஈற்றிலுள்ள “ன்” என்ற ஒலியால் சாமி என்பது ஜாமி என்றாகிறது. 

இப்படியே “இராமநாதன் செட்டியார்” என்ற தொடர் “இராமநாதஞ் செட்டியார்” என்று பேசுவதையும் அப்படியே முன்பெல்லாம் எழுதுவதையுங் காண்கிறோம். 

பண்டைக் கல்வெட்டுக்களில் (குறிப்பாக இங்கே தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், தொகுதி 14 – பாண்டியர்கள் (South Indian Inscriptions Vol 14 Pandyas​) மாறஞ்சடையன் (=மாறன் சடையன்), கண்டஞ்சாத்தன் (கண்டன் சாத்தன்) போன்ற பெயர்களைக் காண்கிறோம். “ன்” என்று முடியும் பெயர்களை அடுத்து வல்லினங்கள் வந்து அந்த ன் + வல்லினம் என்றவொலித்தொடர் -ங்க்-, -ம்ப- என்று மாறும் புல்லங்கொற்றன், பூதங்குடியன், மாறம்பட்டன் (மாறன்பட்டன்) போன்ற பெயரமைப்புக்களையுங் காண்கிறோம்.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையும் (1876-1954) பொன்னியிஞ்ஜெல்வன் என்றே பேசியிருப்பார். எப்படி? சான்றென்ன? அவர் புன்சிரிப்பு என்பதைத் தம் பாடலில் எப்படிப் பேசியெழுதியுள்ளார் தெரியுமா? புஞ்சிரிப்பு என்று!

(https://www.tamilvu.org/library/nationalized/pdf/56-cbalasubramaniyan/sandroortamil.pdf பக்கம் 53) 

நெஞ்சிற் கவலையெலாம்

நீங்கத் திருமுகத்தில்

புஞ்சிரிப்பைக் காட்டி எம்மைப்

போற்றும் இளமதியோ? 

என்று பாடியுள்ளார்! அவர் நெஞ்சு (nenju) என்பதற்கு எதுகையாகப் புஞ்சிரிப்பு (punjirippu) என்று பாடியிருப்பதைக் காண்க.

நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் எஞ்செய்வான்:

இப்படியே நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்துப் பாசுரங்கள் பாடின சில ஆழ்வார்களும் அப்படியேதான் பேசியுள்ளனர்.

  “என் செய்வான்” (என்ன செய்வதற்கு) என்பதனை அவர்கள் “எஞ்செய்வான்” என்றே பாடியுள்ளனர். 

9ஆம் நூற்றாண்டினரான தொண்டரடிப்பொடி யாழ்வார்  “போதெலாம் போதுகொண்டு” என்ற பாசுரத்தில் (திருமாலை: 28)

“ஏதிலேன் அரங்கர்க் கெல்லே எஞ்செய்வான் தோன்றி னேனே” என்று பாடுகின்றார்.

அவரே அடுத்தும் (திருமாலை: 30)

 “எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே.” என்று மீண்டும் பாடுகிறார்!

அதே 9ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்துப் பெரியாழ்வாரும் தம்முடைய திருமொழியில் (4:6:3) “ … எஞ்செய்வான் பிறர் பேரிட்டீர்”, அதாவது, என்ன செய்வதற்காகப் பிறருடைய பேரை இட்டீர்?” என்று வினவிப் பாடியுள்ளார்!

என்செய்வான்  என்பதன் என்ஜெய்வான் என்ற உச்சரிப்பே மேலும் எஞ்செய்வான் (எஞ்ஜெய்வான்) என்றாகியது.

கம்சன் (கம்ஸன்) கஞ்சனானான்! 

அடுத்து இன்னும் முந்தைய காலத்திற்குச் சென்றால் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் “கஞ்சனார் வஞ்சங் கடந்தானை” என்று பாடுவதைக் காண்கின்றோம்; அங்கே கஞ்சனார் என்றால் கம்சன்; கம்சன் (என்பதனைக் கஞ்சன் என்றே இளங்கோவடிகள் பேசியிருப்பதைக் காண்கின்றோம். 

நகைச்சுவைப் பேச்சாளர் மதுரைமுத்து: பென்சில் – பெஞ்சில் 

பென்ஷன் என்பதைத் தமிழர்கள் பிஞ்சின் என்று பேசியுள்ளனர்; தமிழகராதியில் அதைக் காணலாம். மேலும் பென்சில் என்பதும் அப்படியே பெஞ்சில் என்றுதான் தமிழ்ப்படும்; புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளர் மதுரைமுத்து அப்படியே பேசுவதை இந்தக் காணொளியிலே கவனிக்கவும்: https://www.youtube.com/watch?v=DDiFzg_tbx0&t=135s 

தொல்காப்பியத்தில் தேஞ்சாடி (தேன் சாடி)!:

தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தில் 342-ஆம் நூற்பாவில் தேன் என்ற சொல்லின் புணர்ச்சி முறைக்கான “மெல்லெழுத்து மிகிமும் மானமில்லை” என்பதன் உரையிலே இளம்பூரணர் “தேங்குடம்; சாடி, தூதை, பானை என வரும் என்கின்றார்; அதாவது தேன் என்பதன் இறுதி நகரம் வரும் வல்லினத்திற்கு இணங்க ஒலிமாறும்: எனவே தேங்குடம், தேஞ்சாடி, தேந்தூதை, தேம்பானை என்று பேசப்படும். தேஞ்சாடி என்ற சொல்லைப் பாவலரேறு பாலசுந்தரம் உரையில் வெளிப்படையாகக் காண்க.

எனவே தொல்காப்பியக் காலத்திலும் இந்தச் சந்திவிதி நிலவியமை காண்கின்றோம்.

அதைப் புரிந்துகொள்ள கவனிக்கவேண்டியது என்னவென்றால் ச என்ற எழுத்தை இப்பொழுது பலர் ஸ (s) என்று ஒலிப்பது பெருகிவிட்டது. முன்பெல்லாம் இப்படிக்கிடையாது. தொல்காப்பியமும் “சகார ஞகாரம் இடைநா அண்ணம்” என்கிறது; அதாவது ச என்ற எழுத்துப் பிறப்பது நாக்கின் இடைப்பகுதியும் வாயின் மேலண்ணமும் சேர்வதால் என்று பொருள். ஸ என்ற கிரந்த எழுத்து பிறகு உண்டானதே அதனாலேதான்.

மீண்டும் நம் தலைப்பிற்குத் திரும்ப:

இது எல்லா மெல்லின வல்லினச் சோடிகளுக்கும் பொருந்தும். 

காய் (kaay) ஆனால்  மாங்காய் (maang-gaay)

சோலை (choalai ) ஆனால் மாஞ்சோலை (maanj-joalai)

தோப்பு (thoappu)  ஆனால்  மாந்தோப்பு maan-dhoappu

பழம் (pazham) ஆனால் மாம்பழம் (maam-bazham)

இப்படியே  தயிருஞ்சோறு, புளியஞ்சோறு என்பதையும் கவனிக்க.

எவன் சொன்னான் என்பதை எவஞ்சொன்னான் அதாவது எவஞ்ஜொன்னான் என்று மக்கள் பேசுவது இந்த முறையினாலேதான்!

சகரத்தின் சரியான உச்சரிப்பு:

மேலுந்தொடருமுன் கவனிக்கவேண்டியது என்னவென்றால் ச என்ற எழுத்தை இப்பொழுது பலர் ஸ (s) என்று ஒலிப்பது பெருகிவிட்டது. முன்பெல்லாம் இப்படிக்கிடையாது. தொல்காப்பியமும் “சகார ஞகாரம் இடைநா அண்ணம்” என்கிறது; அதாவது ச என்ற எழுத்துப் பிறப்பது நாக்கின் இடைப்பகுதியும் வாயின் மேலண்ணமும் சேர்வதால் என்று பொருள். ஸ என்ற கிரந்த எழுத்து பிறகு உண்டானதே அதனாலேதான். 

காஞ்சிக் காமகோடியார் தம்முடைய தெய்வத்தின் குரல் என்ற நூலில் “ஸினிமாப் பாட்டு, பாலிடிக்ஸ், நாவல், பத்திரிக்கைகள் இவைதான் சின்ன வயஸிலிருந்தே எல்லாரையும் இழுக்கும்படியாக ஏற்பட்டிருக்கிறது” என்ரு எழுதுவதைக் கவனிக்கவும். cinema என்பதன் ஒலியை அப்படியே குறிக்க ஸினிமா என்றும் வடமொழிச் சொல்லான வயஸ் என்பதற்கும் அப்படியே ஸ் என்ற கிரந்த எழுத்தைப் புழங்குவதைக் கவனிக்கவும்.

இவ்வாறு தமிழுக்குரிய உச்சரிப்பின்படிப் பொன்னியின்ஜெல்வன் அல்லது பொன்னியிஞ்ஜெல்வன் என்று  மரபோடு சொல்லிப் பயன்பெறுவோமாக!

செம்மையான அறிவியல் நெறிப்படியான ஆய்வுகள் நடத்தும் SARII நிறுவனத்திற்கு நன்கொடை ஈக! https://www.sarii.org/gettinginvolved.html

அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் 153-ஆம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Mahatma Gandhi – birthday

அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் 153-ஆம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் 153-ஆம் பிறந்த நாளான இன்று அனைவோர்க்கும் அகமும் புறமும் பொலிய வாழ்த்துக்கள்!

அவருடைய வரலாற்றுச் சுருக்கத்தை இங்கே காணவும்: Biography of Mohandas Gandhi, Indian Independence Leader  

தந்தை கரம்சந்துக் காந்திஇளந்தைப் பருவமோகன் தாசுதாயார் புத்திலிபாய்

“Generations to come will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth.” –  Albert Einstein

இயற்பியலறிஞர் ஆல்பெர்ற்று ஐன்ஸ்ற்றைன் மகாத்மா காந்தியைப்பற்றி “வருங்காலத் தலைமுறையினர் இவர்போலும் ஒருவர் இந்த வையகத்தின்மீது தசையுங் குருதியுங்க்கொண்டு யாத்த மாந்தர் யாக்கை கொண்டு உலாவினார் என்பதை நம்பாமலேகூடப் போகலாம்” என்று கூறிய வியப்பான உயர்மொழிகளை நினைவுகூர்ந்து அண்ணல் காந்தியடிகளைக் கைகூப்பித் தொழுது அவரையும் அவர்தம் சால்பையும் அருஞ்செயல்களையும் மறவாதிருப்போமாக.

தமிழுக்கும் அண்ணல் காந்திக்கும் உள்ள தொடர்பைக் கவனிக்கவேண்டும். உருசியச் சிந்தனையாளர் லியோ றால்ஸ்றோய் (Leo Tolstoy) தாரகநாத் தாஸ் என்பவர்க்கு எழுதிய “ஓர் இந்துவிற்கு எழுதும் கடிதம்” (பக்கம் 48-49) என்ற கடிதத்திலே திருக்குறளின் இன்னாசெய்யாமை (துன்பஞ் செய்யாமை) அதிகாரத்தினின்றும் ஆறு குறள்களின் (311-315, 319) மொழிபெயர்ப்பினை மேற்கோளாகக் கூறியெழுதியது காந்தியடிகளின் சத்தியாக்கிரகத்தின் தூண்களுள் ஒன்றானது.

 இந்தியச் சமுதாயமும் அதன் அரசியலும் சாதிமதப் பாகுபாட்டின் அடியாகக் கொடுமைகளையும் வன்முறைகளையும் முறைகேடுகளையும் மேற்கொண்டிருக்கும் இன்று அந்தச் சான்றோனின் கோட்பாடுகள் முன்பைவிட இன்னும் தொடர்பும் தேவையும் உள்ளவை ஆகின்றன.

    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

    செய்யாமை மாசற்றார் கோள் (திருக்குறள்: 311)

[இன்னா = துன்பம்; மாசு = குற்றம்; கோள் = கொள்கை, கருத்து]

மு.வரதராசனார் உரை:

சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

Drew-Lazarus: “It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.”

ஆகவே தன் மதத்திற்கோ சாதிக்கோ தனக்கோ எவ்வளவு அதிகாரம் ஆட்சிவலிமை செல்வஞ் செல்வாக்கு எல்லாங் கிடைப்பதாய் இருந்தாலும் மற்ற மதத்தினர் சாதியினர் என்று யார்க்குந் தீங்குதுன்பங்கள் செய்யலாகாது.

உலகத்தார் உள்ளத்தை ஆளும்படிக்குச் செல்வாக்குப் பெறும் ஒரேவழி பொய்யின்றி நடத்தலே ஆகும்!

உள்ளத்தாற் பொய்யா(து) ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

[குறள் எண் – 294 பால் – அறத்துப்பால்  அதிகாரம் – வாய்மை]

மு. வரதராசன் உரை : ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

Drew-Lazarus:“He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.”

திருக்குறளில் கண் என்ற சொற்கள்

[சிறகு என்ற தவணையத்திலே நான் “செய்யுள்களை எளிதில் புரிந்துகொள்வது எப்படி?” என்ற தொடர்கட்டுரை எழுதுகிறேன்.]

செய்யுள்களை நேரடியாகப் புரிந்துகொள்ளச் சில சீரான நெறிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று அன்றாடம் பழகிய சொற்கள்போல் ஒலித்தாலும் பல சொற்கள் எதிர்பாராத பொருள்களிலும் வழங்குவதைத் தெளிவாகப் புரிந்துகொள்வது.

இந்தக் கட்டுரையில் திருக்குறளில் கண் என்ற ஒலிகொண்ட சொற்களின் பொருள்வேறுபாடுகளை வகுத்தும் தொகுத்தும் விளக்குகிறது.

செய்யுள்களை எளிதில் புரிந்துகொள்வது எப்படி? – 1

சிறகு என்ற தவணையத்திலே நான் “செய்யுள்களை எளிதில் புரிந்துகொள்வது எப்படி?” என்ற தொடர்கட்டுரை எழுதுகிறேன்.

அதனைக் கண்டு பயன்பெறுக.

அதன் முதற் கட்டுரை செய்யுள்களைப் புரிந்துகொள்வதன் அடிப்படை வழிமுறைகளை விளக்குகிறது.

“peer pressure” = இணக்க நெருக்கடி

Peer pressure என்று வழங்கும் ஆங்கிலச்சொல்லுக்குத் தக்கசொல் “இணக்க நெருக்கடி”.
தன்னுடன் இருப்போரிடம் இணங்கி நடக்க ஏற்படும்  நெருக்கடி இணக்கநெருக்கடி.
“இப்பொழுதெல்லாம் இணக்கநெருக்கடியாலே கல்லூரி மாணவர்கள் தாம் தமிழர்கள் என்பதையே மறைக்கமுயல்கின்றனர்”
“இணக்கநெருக்கடி பகட்டைப் பெருக்கி உளைச்சலைக் கூட்டும்”
“இணக்கநெருக்கடியை வெல்லவே மாணிக்கவாசகர் உலகமே தன்னைப் பேயென்று சிர்க்க அந்தப்பழிச்சொல்லையே அணிகலனாகப் பூண்பேன் என் நெறியினின்று கோணமாட்டேன் என்று போற்றித் திருவகலில் முழங்குகிறார்”

அந்தத் திருவாசகச் சொற்களைக் கீழே காணலாம்.

http://www.shaivam.org/siddhanta/thivacha1_u.htm#dt02

“தொழுது உளம் உருகி அழுது உடல்கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாதென
படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்
கசிவது பெருகிக் கடல் என மறுகி
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூண் அது ஆகக் கோணுதல் இன்றி” 70

நாமும் அந்தச் சான்றோன் உணர்த்திய நற்கொள்கைப்படி செந்தமிழ்நெறியை இக்கால இணக்க்நெருக்கடிக்காக விட்டுக்கொடாமல் நிலைநிற்போமாக.

“நும்நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” – இளம்பூரணர்

1967-69 யாண்டுகளில் சென்னை மாகாணம் என்று அதற்குமுன் வழங்கிய பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றப் பெயர்சூட்ட முனைந்த பொழுது சான்றுகள் தேடியபொழுது சிலப்பதிகாரத்தில் காட்டினதாகச் சொல்லுவார்கள்.  சிலப்பதிகாரத்திலே “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய இது நீ கருதினையாயின்” (சிலப்பதிகாரம் : வஞ்சிக் காண்டம்) என்று சொல்கிறது.

ஆனால் சிலப்பதிகாரத்தில் மட்டுமேயன்றி மற்ற பழைய உரைகாரர்களில் ஒருவரும் தமிழ்நாடு என்ற சொல்லை வழங்குகின்றார். அது சிலப்பதிகாரத்தின் வழக்கை விட இன்னும் தேற்றமானது. அதைக் காண்போம்.

தொல்காப்பியத்தின் பழைய உரைகாரர்களுள் முந்தியவர் இளம்பூரணர் (கிபி 11-ஆம் நூற்றாண்டு).  செப்பும் வினாவும் வழுவாது வருதற்கு “நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்” என்பதை எடுத்துக்காட்டுகின்றார் இளம்பூரணர்.  அதை  “உரையாசிரியர்கள்” என்ற நல்ல நூலில் (1977) அறிஞர் மு.வை.அரவிந்தன் குறிப்பிட்டுத் “தமிழர் வழங்கிய நாட்டைத் தமிழ்நாடு என்று வழங்கிய வழக்கம் அக்காலத்தில் இருந்தது என்பதை அறியும்போது எல்லையற்ற மகிழ்ச்சி பிறக்கிறது” என்கிறார்.

இது  அன்றைய தமிழகம் மூவேந்தர்களும் வேளிர்போன்ற சிற்றரசர்களும் ஆண்டதால் ஆட்சிதான் பிளவுபட்டிருந்ததே தவிர தாம் தமிழர்  என்ற  ஓரினத்து அடையாளம் பிளவுபடாமல் தெளிவாக வாழ்ந்ததைக் காட்டுகின்றது.

சங்கக்காலத் தமிழர் கூட்டணி: மேலும் சங்கக்காலத்தின் முற்பகுதியிலே தமிழர்கள் வடபுலத்து மன்னர்களின் படையெடுப்பிலிருந்து தமிழகத்தைக் காக்க 113  யாண்டுகளாவது கூட்டணியாகக் கூடியிருந்ததைக் காரவேல என்னும் கலிங்கமன்னனால் தோராயம் கிமு 175-ஆம் ஆண்டிலே பொறித்த அத்திகும்பாக் கல்வெட்டிலே  தெரிகிறது.  கமில் சுவெலெபில் (1989)  அதைக் கொண்டு தமிழர்களின் கூட்டணி கிமு 288ஆம் யாண்டிலே தொடங்கியிருக்கவேண்டும் அது மோரிய மன்னன் பிந்துசாரன் தமிழகத்தைக் கைப்பற்ற முனைந்தகாலமாய் இருக்கவேண்டுமென்றும் கணிக்கிறார்.
மேலும் சிலப்பதிகாரத்திலே வஞ்சிக்காண்டத்தில் வடபுலமன்னர்களான கனக விசயர்களை தோற்றோடும் காட்சியை “அரியில் போந்தை அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த கன விசயரை” நீர்ப்படைக்காதை (189-190) என்று பாடுகிறது; அஃதாவது “அழிவில்லாத பனைமாலை சூடிய அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை” (அல்லது “பனைமாலை சூடியஅருந்தமிழ்வேந்தன் ஆற்றலை அறியாது …” என்றும் வேங்கடசாமி நாட்டர் உரை). எப்படியாகினும் பனைமாலை சூடிய சேரரும் தம்மை வெறுமனே சேரர் என்று மட்டும் கருதாது அதனினும் பெரிய பொதுவாகிய தமிழர் என்ற குடியின அடையாளத்தோடு (national identity) எண்ணி வாழ்ந்தனர் என்று தெற்றெனத் தெரிகிறது.

இதனை இந்தியா என்பதோடு ஒப்பிடவேண்டும்.  இந்தியா  என்று ஒரு நாடோ குடியோ இனமோ ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன்னர்க் கிடையாது.   யாரும் தம்மை இந்தியர்/பாரதர்/பாரதீயர் என்று அழைத்துக்கொண்டதில்லை. இந்தியா என்பதை அயிரோப்பாப் போல் ஒரு பலப்பல மொழியினங்கள் நாடுகள் சேர்ந்த கண்டமே ஆகும். ஆததால்தான் அதனை இந்தியத் துணைக்கண்டம் என்பார்கள். புகழ்வாய்ந்த வரலாற்று அறிஞர் துவி.நாராயண சா (D.N.Jha) என்பாரின் “இந்து அடையாளத்தின் மறுவாய்வு” (Rethnking Hindu Identity) என்ற நூலில் இது தொடர்பாகப் பலசெய்திகளை விரிவாகக் காணலாம்.

1947-இலே படைத்த இந்திய நாட்டுக்கு அதன் பெயர் இந்தியக் குழுமியம் (யூனியன்);  மற்றபடி இந்தியக்குடியரசு என்றாகிய பின்னும் இந்திய அரசியற் சட்டம் இன்னும் இந்தியக் குழுமியம் என்றே சொல்கிறது. நேற்றுத்தோன்றிய ஓர் அடையாளத்திற்காக வரலாற்றுக்கு முந்திய பல செழித்த உயர்ந்த இன அடையாளங்களை ஒழித்துச் சீர்மை என்ற போலிமையை உருவாக்குவது தகாது. அயிரோப்பியக் குழுமியம் போல் ஒவ்வோரினமும் மற்றோரினத்தை மதித்து ஒருவரை ஒருவர் அழிக்கமுயலாமல் ஒற்றுமையாக வாழும் வழியை இந்தியக் குழுமியம் தேடவேண்டும்.

தமிழர்களும் அதே நல்ல எண்ணத்தில் தம் அடையாளப் போராட்டத்தில் வரம்பு மிஞ்சிப்போய் மற்ற மொழி இனத்தாரின் பெருமைகளையும் பண்பாட்டுக்கூறுகளையும் மறுக்கும் எண்ணத்தைக் கைவிடவேண்டும்; வடமொழி மரபோடு பலசிக்கல்கள் இருப்பதால் அந்த வாதாட்டத்தில் உணர்ச்சி பொங்கி வடமொழி மரபிற்கு உரிய சிறப்புகளை மறுக்கும் போக்குக்கூடாது.

அதேபோல் ஏனைய திராவிடமொழிகளோடும் இணக்கம் தேவை.  மற்ற 25 திராவிடமொழிகளில் மலையாளம் தவிர மீதி 24 மொழிகள் நேரடியாகத் தமிழ்மொழியினின்று கிளைத்தன அல்ல; அதைப் பாரித்து உரைப்பதும் குற்றமாகும். செந்தமிழ்மொழி மூலத்திராவிடமொழியோடு (Proto-Dravidian) மிகவும் நெருக்கமானது, மற்ற எல்லாத் திராவிடமொழிகளையும் விட; செந்தமிழ்மொழியின் பெரும்பெரும்பாலான கூறுகள் மூலத்திராவிடமொழியினின்றும்  அப்படியே இருப்பவை.  மூலத்திராவிடமொழி பேசியது ஏறக்குறைய கிமு 3000 என்பது உருசிய மொழியியல்அறிஞர் ஆன்றுரோநோவ் (Andronov) கணிப்பு. ழகாரம் தமிழ்-மலையாளம் மட்டும் காக்கிறது; பலப்பல முழுச்சொற்கள் (ஒன்று, இரண்டு, நாலு, ஏழு, எட்டு, அங்காடி, கழுதை) அப்படியே ஐயாயிரம் ஆண்டுகள் பழையன. மேலும் உலகில் 2300 ஆண்டுகளாகத் தொடர்ந்து வழங்கும் ஒரேமொழி செந்தமிழ்மொழியே; அந்த ஒருமொழியில்தான் இன்னும் பள்ளிக்கூடப் பிள்ளைகள் கூட 1800 ஆண்டுகள் பழைய இலக்கியங்களைத் தாய்மொழிப்பாடத்தில் நேரடியாகப் பயில்கிறார்கள்.  மற்றமொழியினர் 500 ஆண்டுகள் கூடப் பழைய இலக்கியம் புரிந்துகொள்வது கிடையாது. அதுவே தமிழ்மொழிக்கு உரிய ஒரு பெரிய உலக விந்தையாகும்; அதை அந்த அளவோடு அமைந்து அதைப் போற்றும் வழியை ஆய்வோமாக. அந்தப் பெருமைக்கு உரியோராக நாமும் பெருந்தன்மையோடு ஒழுகுவோமாக.

கயிலாயமலையின் பழைய பெயர்

ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப்பரணி என்னும் நூலில் கயிலாயமலைக்குப் பள்ளி என்னும் பெயர் இரண்டுதடவை வழங்குகின்றது.

“பள்ளிக்குன்றும் விற்குன்று மொழிய”  (தக்கயாகப்பரணி. 536). என்று பாடுகிறது அங்கே.

சென்னைப் பல்கலைத் தமிழகராதி அதற்குக் கைலாச பருவதம் என்றே பொருள்சொல்கிறது:

பள்ளிக்குன்று: . Mt. Kailās; கைலாச பருவதம். பள்ளிக்குன்றும் விற்குன்று மொழிய (தக்கயாகப். 536).

பள்ளிவெற்பு : பள்ளிக்குன்று. பள்ளிவெற்பின் மாறுகோள் பெறாது (தக்கயாகப். 371).

இந்தச் சொல்லுக்கும் கயிலாயத்திற்கும் என்ன தோதென்று திகைக்கிறது. நாம்  பள்ளி என்ற சொல்லின் இக்காலப்பொருள்களைக் கொண்டு ஏதாவது  சிவனின் இருப்பிடம் என்று சொல்லலாம். ஆனால் அது வெறும் பாமரமானமுயற்சியேயாகும். அதன் தோற்றம் புதைந்துபோய்விட்டது.

இது தமிழர்கள் (பழந்திராவிடர்களாக) மிகப்பழங்காலந்தொட்டுக் கயிலாயம்போன்ற மலைகளுக்குத் தொடர்புள்ளவகையில் வாழ்ந்து அதற்கான பழஞ்சொல்லைப் போற்றியுள்ளதைக் காட்டுகிறது.

மேலும் குன்று என்பது சிறிய மலையைக் குறிக்கும் என்பதும் இதில் பொய்படுகிறது. குன்று என்றால் வெறும் மலை என்பதே பொருள் என்றும் அறிகிறோம்.

Background: பிற்புலமும் வரலாறும்

Background என்பதற்கு எல்லாநிலைகளிலும் பிற்புலம் அல்லது பிற்புலம் என்பது இப்பொழுது பெருகிவருகிறது.

ஆனால் அதுவும் ஒரு ஆங்கிலச் சிந்தனைப்பெயர்ப்பாகும்; அதாவது ஆங்கிலச்சொல்லை அது குறிக்கும் கருத்தை நேரடியே பெயர்க்கும் பிழையாகும்.

எடுத்துக்காட்டாக:

“இதை அவருடைய பிற்புலம் தெரிந்தால்தான் முழுதும் உணரமுடியும்” என்றுசொல்வதில் காணலாம்

அது “”One can realize this only if one knows his background”  என்பதைச் சொல்லமுயல்கிறது.  அது செயற்கையாக ஒலிப்பதைப் பலரும் உணரக்கூடும். ஏனென்றால் பிற்புலம் என்பது இந்த நிலைமைக்கு இயல்பான தமிழ்க்கருத்து அன்று; இதையே வேறுவகையில் சொல்லிவந்திருக்கிறோம்; இன்றும் ஆங்கிலத் தொடர்பில்லாதவர்கள் வேறுவகையில் சொல்லுவார்கள். அதை மறந்து போய் ஆங்கிலச்சொல்லை நேரடியாக மொழிபெயர்த்ததால் விளைந்த விளைவு மேற்கண்ட வாக்கியம்.

இதை முழுதும் உணர ஆங்கிலச்சொல்லை ஆராய்வோம்.

background  என்னும் ஆங்கிலச் சொல் பொதுவாக இரண்டு பொருள்களில் வழங்கும்.

(1) இடம்தொடர்பான பொருள்

(2) ஆட்களுக்கோ சிலநிகழ்ச்சிகளுக்கோ இதுவரை நேர்ந்தது

http://www.answers.com/topic/background

  1. The ground or scenery located behind something.
    1. The part of a pictorial representation that appears to be in the distance and that provides relief for the principal objects in the foreground.
    2. The general scene or surface against which designs, patterns, or figures are represented or viewed.
  2. The circumstances and events surrounding or leading up to an event or occurrence.
  3. A person’s experience, training, and education: Her background in the arts is impressive.

முதலிரண்டும் பிற்புலம், பின்னணி ஆகிய பொருள் கொண்டவை. பின்னவை அப்படியில்லை. அவை இதுவரை நடந்துள்ளதைப்பற்றிச் சொல்லும் குறிப்புடையவை. அவற்றை உணர்த்தத் தமிழ்மொழியில் ஆங்கிலச் சொல்லை நேரடியாகப்பெயர்த்தால் சிறக்காது. பொருளை உணர்ந்து ஏற்கனவே தமிழ்மொழியில் உள்ள சொல்லைச் சொல்லவேண்டும். அது வரலாறு, வரல்முறை போன்ற சொற்களால் அமையும்.

ஆகவே  “his background” என்பதற்கு அவருடைய வரலாறு என்று சொல்லவேண்டும்.

ஆனால்  “படம்பிடிக்கும்பொழுது அழகான பிற்புலம் தேவை” என்பது தகும்; ஏனென்றால் அது உண்மையான பொருள்களின் இடம் சார்ந்த கருத்து.

“One can realize this only if one knows his background”  = “அவருடைய வரலாறு தெரிந்தால்தான் இதை முழுதும் உணரமுடியும்”

“I would like to describe in this essay the background  to the genocide of Tamil Eelam”

“ஈழத்தாருக்கு இழைத்த இனப்படுகொலையின் வரலாறு என்னவென்று இந்தக் கட்டுரையில் தெரிவிக்க விரும்புகிறேன்”.

மேலும் ஆங்கிலத்திலும் முடிந்தவரை நேரடிப்பொருளுடைய சொற்களை வழங்குவது நமக்கும் நல்லது.

இயலும் வரை background என்ற சொல்லுக்கு ஈடாக history என்ற சொல்லை வழங்கினால் சிறக்கும்.

ஆங்கிலத்தில் சட்டென்று எந்தச்சொல்லையும் இன்னொரு பொருளுக்குச் சார்த்திச் சொல்லும் வழக்கம் உள்ளதால் சொல்லினோசை மட்டும் ஒத்திருக்கும்; ஆனால் குறிப்பு வெகுவாக மாறியிருக்கும்.

ஆனால் தமிழ்மொழியிலோ மற்ற உலகமொழிகளிலோ அப்படிச் செய்ய இசைவதில்லை ; அதெபோல் தமிழ்மொழ்யிலிருந்து எல்லாச்சொல்லையும் பச்சையாக ஆங்கிலத்துக்கும் பெயர்க்கமுடியாது; பொருளுணர்ந்துதான் செய்யமுடியும்; இல்லாவிட்டால் மாறுபட்டு ஒலிக்கும்.  இப்படி எண்ணிப்பார்க்காமல் மொழிபெயர்த்தால்  நம்முடைய ஆராயும் திறமையையும் போக்கிவிடும்.

Tamil Script Reform: Its Vacuity Next to The Chinese Script

This is about the push for reforming the Tamil script as advocated by V C Kulandaisamy (there the video link is listed in the middle of the page. Another direct link is here ).

Since I wrote this blog a few days ago, apparently it has been taken up for consideration by the TN Govt.

You will realize at the end of this that this reform proposal is a typical case of a solution looking for a problem.

Now, those who push for the reform of the Tamil script keep saying that children will learn the language quicker with the simplified script and so one can effectively increase the literacy rate.

  • But Richard Sproat a linguist says this (at the bottom of the quoted text):  “Finally, there is a common belief that if one wants to increase literacy in a society, it helps to make the writing system simpler. Commonly cited examples are Korean Hangul and Chinese character simplification. I will argue there is no basis for this belief. Indeed it is rather simple to show that while literacy rates correlate well with a number of socio-economic factors, the correlation between literacy rates and the complexity of the writing system is effectively zero.”

Now, to see that there is absolutely no need for this reform we must first think of the Chinese languages (note the plural).

  • The Chinese languages which are a group of mostly mutually unintelligible languages and  spoken in Mainland China and Taiwan have a script that has many tens of thousands of symbols with no uniform scheme. There is no definite number known for its count! Some dictionaries list as many as 106,000+ symbols!
  • The writing system requires at least a few thousand symbols to be learnt for normal fluency.
  • They are not at all language-based scripts like other languages of the world. They are a mixture of pictures and sound suggestions (yes just a suggestion not a full indication of each and every sound making up a word).
  • They learn everything including advanced technology using books in Chinese script/languages only.
  • Even in the internet arena, Google’s CEO Schmidt estimates Chinese becoming the most dominant language of the internet in about five years.
  • Now the Chinese people whether Mainland, Hong Kong or Taiwan are much more advanced in most economical, technological and political aspects. Mainland China is dreaded with respect by the world and pandered to with special trade and political privileges. They have launched satellites, test nuclear warheads and explore the moon. Taiwan is economically advanced and exports all kinds of modern devices and technology.
  • There is an  argument given by Tamil script reform proponents regarding Chinese: that the Chinese script was reformed and simplified to suit practical use.  It was very limited and some of the more ambitious simplifications were rescinded.  It is  vacuous to keep citing that as a model as the fact still remains that the Chinese script has maintained its complexity mentioned above:  It still has no serious relation to the sound details of the spoken language and thousands of symbols to learn for a decent fluency.
  • Japanese script is also similar to Chinese in many aspects and nobody has to argue how advanced they are. So the issue is not language script but it is how much a language and the speakers of that language are respected  by its own people in all walks of life.  That is the only way to strengthen ourselves not by tampering with  the language.
  • So with the Tamil script, with its one-to-one sound correspondence and with only dozens of symbols, cannot be said to be in a critical state for reform in any sense of the word. This reform proposal is just an engineering fantasy to tinker with things.
  • So this is a typical case of a solution looking for a problem…That is, somebody thought “Hey we can after all simplify the script further and what fun it will be to see it implemented!” and so proposes an imaginary problem to justify his itch to throw a wrench…

Next consider English even though it has a phonetic script.

  • It is highly irregular in spelling and pronunciation. It is actually many times more difficult to teach English language reading and writing than Tamil language if one measures the level of fluency of reading and writing in the same objective way. But we dare not tinker with the English language. Why? because we have determined subconsciously out of our deep inferiority complex that English is superior and is not to be questioned hence  not negotiable and that the ‘weak and poor’ (ஊருக்கு இளைத்த) Tamil is the one to change.
  • But the poor Tamil language subordinate as it is deemed to be shall ever be ready to stand in obeyance to change itself to suit the whims of the confused elite.
  • After all they do not care about the loss of heritage and only about living for the moment earning their livelihood using English.
  • These people will not rest with their tinkering until Tamil language becomes transformed into English (or in the most generalized sense the dominant language of the time, who knows Hindi, Spanish or Chinese!).

Coming to Hindi, its script is called Devanagari the same as the one used for Sanskrit.

  • Hindi/Sanskrit’s Devanagari script is one of the most irregular in the Indian subcontinent which can be understood immediately by anyone who knows Hindi or Sanskrit (Marathi and Gujarati are similar). It has complex symbols for various combinations of consonants and is very difficult to type set, create fonts and type in computers compared to Tamil. Actually the reason Tamil language had the first ever modern book published in the 1800s was that it had the most regular (or linear) script and was an easy job. It is still true when compared with other languages such as Telugu/Kannada or Hindi/Sanskrit etc. So why this false alarm about difficulties in computerization or learning of Tamil script only?

Simplifying the script does not is speed up leaning  the language.  Otherwise, learning German, French or Italian should be so easy for us English speakers since they all share the same script!

  • Language means sounds, words, grammar and conventions. The sheer volume of these linguistic aspects and their rules and irregularities in almost all the languages of the world  overwhelm any complexity of their script.
  • That is why, in spite of English, German and French sharing the same script, we find such a vast gap between their speakers in learning each others’ ‘ language.
  • Even Vitetnamese has the Roman script like English does,, albeit with some diacritical markers for Vietnamese-specific sounds. And when was the last time you heard someone learning Vitenamese on the fly just because he or she knew the core script which is the same as that of English?
  • The same is the case with Hindi and Sanskrit: Even though they have the same Devanagari script, Sanskrit is no easier for a Hindi speaker to learn than it is for a Tamil or Telugu speaker.  After the initial fixed period of learning the script, they are at the same level. Because they now come down to the language itself in contrast to the script.
  • What all this means is that, however much one simplifies the Tamil script, the language is going to be still complex enough, And if that is also too much for unmotivated learners, the process of simplification has to next attack the language itself: Why not simplify the sounds, simplify the grammar, throw away fine differences of meanings and use fewer words and so on. And all this, only because the learner’s family did not even care about the language for what it was and has been?

A very important negative effect it will have on cultural and religious matters:

  • There are so many precious Tamil religious works that will be destroyed by this reform.  A very important example is the old Vaishanavite commentaries by Periyavacchan Pillai பெரியவாச்சான் பிள்ளை) and others on Thivviyap Pirapantham. These are voluminous and are extremely prized by Vaishnavites as they are their lifeline to the Azhwar’s songs. If such works are ever reprinted they are always printed from photocopies as it is extremely expensive and time consuming to type set again. Imagine them now in  the era of a reformed script: they cannot be simply photocopied and reprinted en masse but have to be manually typeset. Forget about it…Vaishnavites can write off their religious life line as lost for ever. It will become now so much more difficult to produce well-read religious leaders.
  • Similar is the case with Thevarm, Thirumantiram, Thiruvacakam and other important works. Not to forget arcane philosophical works in such fields as Saiva Siddhantha.
  • Other areas affected are: books in  Siddha medicine and astrological works such as Pulippani (புலிப்பாணி).

What about the claims that it is very easy to republish books in the new script in this modern age?

  • When the switch over the new script is starts, the whole Tamil publishing industry will have to keep itself busy just to republish/reprint earlier books and materials in the new script. Note that this means manual work in typesetting. Only those that are in computer format can probably be mechanically moved.  But still the point is that even then the industry will be busy with this republishing work. Not with publishing new ideas and creations.
  • What this means is that instead of having to simply publish additional new 10,000 books with new content per year as usual, now the industry has to schedule republishing the hundreds of thousands of old books and material published in the current script. This is an enormous burden on a society that is already unable to keep up with the ideas and creations in other languages of the world. Now it is burdening itself with a headache brought on by its own bad judgment which was avoidable in the first place.
  • Also since the new script will look so much different and publishers will have to deal with the practical issues of catering to two different segments of the society with two different scripts.
  • In addition to constant project management and content production problems for publishers, this is bound to result in a clear generation gap.
  • There will be so much so money and effort wasted.

In addition to the very serious  loss of readability of publications on Tamil literature, history and cultural elements, we need to convey very strongly the economic and practical devastation it will wreak on the poor and weak segments of the society.

  • It will again be the poor Tamil medium students who will be affected as they are the ones who will be distracted from their staple language for all subjects. Any previously published guide books in all walks of education such as computing, engineering, science or vocational subjects such as motor winding or engine repair or cell phone repair in current Tamil script will be rendered useless. And as for reprinting them, with the perceived economic unattractiveness of publishing in the Tamil language hardly anyone will readily republish them in the new script so soon and in such large numbers and they may be practically lost for a generation or more.
  • This is a really serious situation. English medium ones will get affected only to the extent that their Tamil language subject book might change.  But for Tamil medium students it will be the whole world that will be changed.
  • However from what has seen reported widely, except for the students graduating from good quality schools and with good aptitude for English, many English medium students also resort to Tamil text books for understanding technical subjects. A Vice-Chancellor of a Tamil Nadu university who brought out a computer programming language text book for some language like C++ or Java said it was sold out unexpectedly as even those with English medium schooling also bought them! After all many type-writing class rooms were converted into Matriculation schools in every nook and corner of Tamil Nadu and you cannot expect more than this from the graduates of those schools.
  • We cannot let these unfortunate students be used as guinea pigs in a very foreseeably disastrous socio-linguistic experiment by some misguided engineers.
  • So what we need is from  Sproat’s statement is a better socio-economic system to increase literacy rate.  What these students need is a better quality schooling from the government in languages such as Tamil and English and other subjects.  English as an important career language needs to be taught using a totally changed curriculum that views English as a second language (ESL). Current curriculum uses the methods put in place by the English colonial rulers using the curriculum for native English speakers. This means that we throw out appreciation of  English literature as a goal of English education and replace it with sufficiency for modern technical, business and social communication. Actually with this revamped curriculum parents will stop being wrecked financially by having to admit their children in English medium schools and employment rate of Tamils will increase many fold.
  • Citing that diaspora Tamil children can learn the language faster is absolutely nonchalant given the equally great nonchalance of many diaspora parents vis-a-vis the Tamil language from the fact that many see the Tamil classes in North America as a place teach spoken language so their kids can communicate with their grandparents! These diaspora parents have no greater goals with the language proficiency.   For Tamil Nadu students it is their livelihood that is affected not just fun in the living room with their grandparents.
  • Moreover we all know that many of these diaspora kids learn additional languages such as Spanish, German and Latin at school.  So how come suddenly Tamil alone becomes so difficult with its very normal script a big obstacle? The real reason is again the low value placed on it by the parents. There has been no complaint from parents so far about this at all to any teachers. The script alone will make only a very small difference in the time to learn. Language is more than this and vocabulary and grammar and fluency take most of the time.
  • So please let us treat this as a classical language not as a tourist language!
  • Some of the senior educationists  who are involved in this reform proposal would instead do much better to focus on making Tamil language an economically viable language by making high-school-level proficiency in it a requirement for admission to Tamil Nadu’s colleges especially professional programs. Then Tamil language will be  respected and  learnt properly by the students. Until then it will be tinkered with by a process that will not rest till it transforms into the dominant language of the time which today is English.
  • As I joke with many on this: Even if God gave the boon to Tamils that they can get instant fluency in the Tamil language if the just think a few moments about it there will be few takers.  Such is the value attached to the language so script simplification will not help as the fundamental problem is with the value attached to the language not with any difficulties allegedly inherent in the script or the language.

Also citing that the script has always changed is not valid at this juncture. What I mean is that:

  • Previously all education in Tamil Nadu meant firstly fluency in Tamil language, literature and grammar. Then any education was also using treatises in Tamil language whether music, dance, ship building, architecture or mathematics (கணக்கதிகாரம் is a famous Tamil math treatise).  And all books being in palm leaves had to be transcribed manually by each generation to save the book from being lost to elements or insects.  All this ensured continuity of the language and culture. But now it is not so. One can get called educated with zilch knowledge of Tamil language.
  • So given the critically dangerously low state of respect for the Tamil language and culture this script reform proposal  is coming at the most inauspicious time. When we have come back to the state of respect Tamil language had a hundred years ago we can reform the script to anything we like. But not now.

சங்கப் புலவர்கள் வெறும் புகழ்பாடிகள் அல்லர்!

இணையத்திலே ஒரு இலக்கியக்குழுவில் ஒருவர் சொல்லியது:
“From the time of Sankam Age till now what we are doing is praising others for money, fame, and selfishness.”

அன்பர்களே
மேற்கண்டவாறு பேசும்முன் சங்கப்புலவர்கள் பலர் தாம்சார்ந்த மன்னர் வழக்கத்துமாறான வாய்ப்புகளில் மானம் போன்ற காரணங்களால் செத்தால் அவரோடு செத்ததை மறக்கக்கூடாது.

இந்தச் செய்தியெல்லாம் கடந்த ஐம்பதாண்டுகளாகவே மறந்துபோயுள்ளனர் தமிழர்கள்.
காரணம் மொழியின் பெருமையில் வறட்டுச் சம்பம். மொழியின் இலக்கியம் சொல்லும் கருத்தில் அக்கறையும் அதில் சொல்லும் நிகழ்ச்சிகளில் பாடுபட்ட மாந்தரின் துன்பத்தை உணர்ந்து நடக்கும் எண்ணமும் இல்லாததே காரணம்.

போலி இலக்கியப்பேச்சாளர்கள் வெறும் நயமும் கோமாளிக் கோலமும் கொள்வதால் இது எங்கே புரியும்?

தன் உரு நிறம்கூடக் கிண்டல் என்று நினைக்கும் “பாப” இலக்கியப் பேச்சாளர்கள் இதை எப்படிப் பேசிப் பணம் ஈட்டுவார்கள்?
புறநானூறு படிக்கிறவர்கள் இதையெல்லாம் உணராமல் படிக்க முனைந்தால் வீண்தான்.

அடுத்து அப்படிப்பட்ட புலவர்களைக் காண்போம்:

[தமிழிணையப் பல்கலை தன் நூலகத்தில் நல்ல நூல்களைப் பழைய  நல்ல  உரையுடன் பொதித்தமைக்கு மிக்க நன்றி]

1. கோப்பெருஞ்சோழன் தன் மகன்கள் தவறாக நடந்ததால் அவர்களோடு போர்பொராமல் வடக்கிருந்து பட்டினிகிடந்து உயிர்நீத்தான். அப்பொழுது அவனோடு பல புலவர்கள் பட்டினி கிடந்து மெதுவாகச் சித்திரைவதைப்பட்டுச் செத்தார்கள்.
 பிசிராந்தையார்: இவர் பாண்டிநாட்டிலிருந்து அவனை வாழ்நாளிலே பாராமலேகூடத் தாமும் வடக்கிருந்தார்.
பொத்தியார்: இவருடையது இருப்பதிலேயே உருக்கமானது. சோழனின் அவைப்புலவர். சோழனோடு பட்டினிகிடக்க முனைந்தபொழுது அவரைத் தடுத்துக் குழந்தைபிறந்தபின் வா என்று சொல்லினான்; அவரும் குழந்தை பிறந்தபின்னர் வந்து இடம்தேர்ந்து உயிர்துறந்தார். இவர் என்னத்துக்காகப் பாராட்டுப்பாடிப் பச்சைக் குழந்தையையும் பெண்டாட்டியையும் விட்டுச் சாவார்? காண்க: http://www.tamilvu.org/slet/l1281/l1281pg2.jsp?x=47#220
 பூதநாதன்: இவர் கருவூர். அவரும் சோழன்பட்டினிகேட்டு ஓடி வந்து அவன் தன் வள்ளூரத்தை ( தசையை ) வாட்டிக் குற்றுயிராகக் கிடக்கும்பொழுது பார்த்து ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய்? நான் மட்டும் வடக்கிருக்கும் பலரோடு முதலிலேயே உட்காராததால் கோபப்புலவியோ? என்று ஊடலாகக் கேட்கிறார். இதை இங்கே பார்க்கவும்.
* அங்கே “பலர் நின்குறியிருந்தோர்” என்று சொல்கிறார். எனவே நமக்குத் தெரிந்த இவர்களுக்கு இன்னும் மேலே பலர் செத்தது தெரிகிறது.
2. கபிலர் எத்தனை மன்னர்களைப் பாடியது தெரியும். சேரனிடம் கறிப்பிரியாணி தின்பதொன்றே தனக்குத் தெரியும் போர்தெரியாது என்று பாடினார்.ஆனால் பாரி செத்தபொழுது அவர் அவன் மகளிரை மணம் செய்ய முடியாமல் கோவலூரில் ஒப்படைத்துவிட்டுப் பட்டினி கிடந்து செத்தார்; இதை ஒருவரும் நினைப்பதுண்டா?. சிலர் அவர் தீக்குளித்ததாகச் சொல்வர். இவர் பதிற்றுப்பத்திலே சேரனிடம் பெறாத செல்வமா? பாரி கொடுக்காத நிதியா? கடைசியில் வெந்தோ வாடியோ சாகவாப் போலிப்பாராட்டுகள்?
3. பெருஞ்சேரலாதனோடு செத்தபலர்: கரிகாலனோடு போரில் முதுகில் ஈட்டி வெளிவரவும் அதற்கு நாணிப் பட்டினி கிடந்து செத்த பெருஞ்சேரலாதன் தெரியும். ஆனால் அவனோடு அந்தக் களத்தில் பலர் பட்டினி கிடந்து செத்தது அகநானூற்றுப் பாடல் 55ஆல் தெரிகிறது. அதை வாள்வடக்கு என்றும் சொல்வது அதன் பழைய நெகிழ்ச்சியான மரபையும் காட்டுகிறது.

” கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண் நாணிய சேர லாதன்
அழிகள மருங்கில் வாள்வடக் கிருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனோடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகி யாங்கு” (அகநானூறு: 55: 10-15)
[ பெரும்பிறிது = சாவு]

இதற்குமேல் பேச என்ன இருக்கிறது?

* அவர்களுக்காக அழுவதைத் தவிரவும்
* அப்படியிருந்த நம் குடிக்கு இருக்கும் வலிமை நினைந்து விம்முவதைத் தவிரவும்
* இதை மறந்ததனால் இக்காலக்குடி துரோகம் பெருத்து எப்படி வலிமையிழந்திருக்கிறது என்று நோவதைத் தவிரவும்…
* இனியாவது மீண்டும் நினைந்தால் உருப்படத் தவறாது என்று நம்பிக்கை கொள்வதைத் தவிரவும்….

பெரியண்ணன் சந்திரசேகரன்