பொன்னியின் செல்வனைச் சரியாகச் சொல்வது எப்படி?

பெரியண்ணன் சந்திரசேகரன்

perichandra@perichandra

[இவ்வாசிரியரின் மொழியியற் பிற்புலம்: Pleonastic Compounding: An Ancient Dravidian Word Structure | Electronic Journal of Vedic Studies]

பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வெளியாகி இருக்கும் இந்தத் தறுவாயில் அதன் பெயரைச் சரியாகச் சொல்வது எப்படி என்று இங்கே சான்றோடு காண்போம்.

அதாவது இராசராசச் சோழனே எப்படிப் பேசியிருப்பான் என்பதே இது.

உடனடி விடை: பொன்னியின்ஜெல்வன் அல்லது பொன்னியிஞ்ஜெல்வன் என்பதே!

ஆமாம் செல்வன் என்பதன் செகரத்தை ஜெகரமாக ஒலிப்பதே திருத்தமான ஒலிப்பாகும்.

[கவனிக்கவும்: (1) சொல் முதலிலும் இரட்டித்து வரும்பொழுதும் சகரத்தை ch என்று ஒலிக்கவேண்டும்; s என்று ஒலிக்கக்கூடாது; அதற்குத்தான் ஸ என்ற இரந்த எழுத்து உள்ளது!. ஆகவே செல்வன் என்பதை chelvan என்னவேண்டும்; அந்த ஒலிப்பே சகரன் இப்படி ஜகரமாக ஒலிமாற அடிப்படைக்காரணம்;  

(2) தமிழில் ஜகர ஒலி உண்டு; ஆனால் அது தனிச் சொல்லின் தொடக்கத்தில் இல்லை; ஹகர ஒலியும் அப்படியே: பகல் என்பதில் பஹல் என்னும்பொழுது அதனைக் கவனிக்க! தொல்காப்பியர் ச-ஜ க-ஹ போன்ற சோடிகளை இன்றைய மொழியியலாரும் வியக்கும்படி ஒரே எழுத்தாக (phoneme) ஆக வகுத்தார்.

3) எழுதியிருப்பது பேசவேண்டிய ஒலிப்புக்களை முற்றிலுங் காட்டாது:

“பழம் கிடைக்கும்” என்று எழுதியிருந்தாலும் “பழங்கிடைக்கும்” என்றே ம் என்பதை ங் என்ற ஒலியாக்கி வாசிக்கவேண்டும்; அதுதான் செந்தமிழ்ப் பேச்சு. இடைவெளி விட்டிருந்தாலும் கூட்டியே வாசிக்கவேண்டும்.]

இதற்கு நேரடிச் சான்றுகள் நன்செய் (நஞ்சை),  புன்செய் (புஞ்சை). அவற்றை நஞ்ஜை,  புஞ்ஜை என்று இன்றும் ஒலிப்பதைக் கவனிக்கவும்.

  செய் அதாவது வயலென்று பொருள்படுஞ்சொல்லை நன், புன் என்ற சொற்களோடு கூட்டிச் சொல்லும்பொழுது சகரம் ஜகரமாக மெலிந்து ஒலிக்கும். அதற்குக் காரணம் அந்தச் சொற்களின் ஈற்றிலுள்ள ன் என்ற ஒலியே. அதன்படிச் சகரன் ஜகரமாக ஒலிக்கும்: நன்ஜெய், புன்ஜெய் என்று; அவையே பிறகு நஞ்ஜெய், புஞ்ஜெய் என்று ஆகி இறுதியாக நஞ்ஜை,  புஞ்ஜை என்று சிதைந்தன.

எவன் சொன்னான் என்பதை எவஞ்சொன்னான் அதாவது எவஞ்ஜொன்னான் என்று மக்கள் பேசுவது இன்னுமுண்டு.

எஞ்சாமி” (எஞ்ஜாமி) என்பதும் “ என் சாமி” என்பதன் உச்சரிப்பே என்பதைக் கவனிக்க. 

சாமி என்பதை ஸாமி என்று தனியே சொல்பவர்கள்கூட “என்சாமி என்று தொடராகப் பேசும்பொழுது எஞ்சாமி என்பதைக் கவனிக்க. இங்கே சகரம் ஜகரமாவது கவனிக்கவேண்டியது. என் என்ற சொல்லின் ஈற்றிலுள்ள “ன்” என்ற ஒலியால் சாமி என்பது ஜாமி என்றாகிறது. 

இப்படியே “இராமநாதன் செட்டியார்” என்ற தொடர் “இராமநாதஞ் செட்டியார்” என்று பேசுவதையும் அப்படியே முன்பெல்லாம் எழுதுவதையுங் காண்கிறோம். 

பண்டைக் கல்வெட்டுக்களில் (குறிப்பாக இங்கே தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், தொகுதி 14 – பாண்டியர்கள் (South Indian Inscriptions Vol 14 Pandyas​) மாறஞ்சடையன் (=மாறன் சடையன்), கண்டஞ்சாத்தன் (கண்டன் சாத்தன்) போன்ற பெயர்களைக் காண்கிறோம். “ன்” என்று முடியும் பெயர்களை அடுத்து வல்லினங்கள் வந்து அந்த ன் + வல்லினம் என்றவொலித்தொடர் -ங்க்-, -ம்ப- என்று மாறும் புல்லங்கொற்றன், பூதங்குடியன், மாறம்பட்டன் (மாறன்பட்டன்) போன்ற பெயரமைப்புக்களையுங் காண்கிறோம்.

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையும் (1876-1954) பொன்னியிஞ்ஜெல்வன் என்றே பேசியிருப்பார். எப்படி? சான்றென்ன? அவர் புன்சிரிப்பு என்பதைத் தம் பாடலில் எப்படிப் பேசியெழுதியுள்ளார் தெரியுமா? புஞ்சிரிப்பு என்று!

(https://www.tamilvu.org/library/nationalized/pdf/56-cbalasubramaniyan/sandroortamil.pdf பக்கம் 53) 

நெஞ்சிற் கவலையெலாம்

நீங்கத் திருமுகத்தில்

புஞ்சிரிப்பைக் காட்டி எம்மைப்

போற்றும் இளமதியோ? 

என்று பாடியுள்ளார்! அவர் நெஞ்சு (nenju) என்பதற்கு எதுகையாகப் புஞ்சிரிப்பு (punjirippu) என்று பாடியிருப்பதைக் காண்க.

நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் எஞ்செய்வான்:

இப்படியே நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்துப் பாசுரங்கள் பாடின சில ஆழ்வார்களும் அப்படியேதான் பேசியுள்ளனர்.

  “என் செய்வான்” (என்ன செய்வதற்கு) என்பதனை அவர்கள் “எஞ்செய்வான்” என்றே பாடியுள்ளனர். 

9ஆம் நூற்றாண்டினரான தொண்டரடிப்பொடி யாழ்வார்  “போதெலாம் போதுகொண்டு” என்ற பாசுரத்தில் (திருமாலை: 28)

“ஏதிலேன் அரங்கர்க் கெல்லே எஞ்செய்வான் தோன்றி னேனே” என்று பாடுகின்றார்.

அவரே அடுத்தும் (திருமாலை: 30)

 “எம்பிராற் காட்செய் யாதே எஞ்செய்வான் தோன்றி னேனே.” என்று மீண்டும் பாடுகிறார்!

அதே 9ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்துப் பெரியாழ்வாரும் தம்முடைய திருமொழியில் (4:6:3) “ … எஞ்செய்வான் பிறர் பேரிட்டீர்”, அதாவது, என்ன செய்வதற்காகப் பிறருடைய பேரை இட்டீர்?” என்று வினவிப் பாடியுள்ளார்!

என்செய்வான்  என்பதன் என்ஜெய்வான் என்ற உச்சரிப்பே மேலும் எஞ்செய்வான் (எஞ்ஜெய்வான்) என்றாகியது.

கம்சன் (கம்ஸன்) கஞ்சனானான்! 

அடுத்து இன்னும் முந்தைய காலத்திற்குச் சென்றால் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் “கஞ்சனார் வஞ்சங் கடந்தானை” என்று பாடுவதைக் காண்கின்றோம்; அங்கே கஞ்சனார் என்றால் கம்சன்; கம்சன் (என்பதனைக் கஞ்சன் என்றே இளங்கோவடிகள் பேசியிருப்பதைக் காண்கின்றோம். 

நகைச்சுவைப் பேச்சாளர் மதுரைமுத்து: பென்சில் – பெஞ்சில் 

பென்ஷன் என்பதைத் தமிழர்கள் பிஞ்சின் என்று பேசியுள்ளனர்; தமிழகராதியில் அதைக் காணலாம். மேலும் பென்சில் என்பதும் அப்படியே பெஞ்சில் என்றுதான் தமிழ்ப்படும்; புகழ்பெற்ற நகைச்சுவைப் பேச்சாளர் மதுரைமுத்து அப்படியே பேசுவதை இந்தக் காணொளியிலே கவனிக்கவும்: https://www.youtube.com/watch?v=DDiFzg_tbx0&t=135s 

தொல்காப்பியத்தில் தேஞ்சாடி (தேன் சாடி)!:

தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தில் 342-ஆம் நூற்பாவில் தேன் என்ற சொல்லின் புணர்ச்சி முறைக்கான “மெல்லெழுத்து மிகிமும் மானமில்லை” என்பதன் உரையிலே இளம்பூரணர் “தேங்குடம்; சாடி, தூதை, பானை என வரும் என்கின்றார்; அதாவது தேன் என்பதன் இறுதி நகரம் வரும் வல்லினத்திற்கு இணங்க ஒலிமாறும்: எனவே தேங்குடம், தேஞ்சாடி, தேந்தூதை, தேம்பானை என்று பேசப்படும். தேஞ்சாடி என்ற சொல்லைப் பாவலரேறு பாலசுந்தரம் உரையில் வெளிப்படையாகக் காண்க.

எனவே தொல்காப்பியக் காலத்திலும் இந்தச் சந்திவிதி நிலவியமை காண்கின்றோம்.

அதைப் புரிந்துகொள்ள கவனிக்கவேண்டியது என்னவென்றால் ச என்ற எழுத்தை இப்பொழுது பலர் ஸ (s) என்று ஒலிப்பது பெருகிவிட்டது. முன்பெல்லாம் இப்படிக்கிடையாது. தொல்காப்பியமும் “சகார ஞகாரம் இடைநா அண்ணம்” என்கிறது; அதாவது ச என்ற எழுத்துப் பிறப்பது நாக்கின் இடைப்பகுதியும் வாயின் மேலண்ணமும் சேர்வதால் என்று பொருள். ஸ என்ற கிரந்த எழுத்து பிறகு உண்டானதே அதனாலேதான்.

மீண்டும் நம் தலைப்பிற்குத் திரும்ப:

இது எல்லா மெல்லின வல்லினச் சோடிகளுக்கும் பொருந்தும். 

காய் (kaay) ஆனால்  மாங்காய் (maang-gaay)

சோலை (choalai ) ஆனால் மாஞ்சோலை (maanj-joalai)

தோப்பு (thoappu)  ஆனால்  மாந்தோப்பு maan-dhoappu

பழம் (pazham) ஆனால் மாம்பழம் (maam-bazham)

இப்படியே  தயிருஞ்சோறு, புளியஞ்சோறு என்பதையும் கவனிக்க.

எவன் சொன்னான் என்பதை எவஞ்சொன்னான் அதாவது எவஞ்ஜொன்னான் என்று மக்கள் பேசுவது இந்த முறையினாலேதான்!

சகரத்தின் சரியான உச்சரிப்பு:

மேலுந்தொடருமுன் கவனிக்கவேண்டியது என்னவென்றால் ச என்ற எழுத்தை இப்பொழுது பலர் ஸ (s) என்று ஒலிப்பது பெருகிவிட்டது. முன்பெல்லாம் இப்படிக்கிடையாது. தொல்காப்பியமும் “சகார ஞகாரம் இடைநா அண்ணம்” என்கிறது; அதாவது ச என்ற எழுத்துப் பிறப்பது நாக்கின் இடைப்பகுதியும் வாயின் மேலண்ணமும் சேர்வதால் என்று பொருள். ஸ என்ற கிரந்த எழுத்து பிறகு உண்டானதே அதனாலேதான். 

காஞ்சிக் காமகோடியார் தம்முடைய தெய்வத்தின் குரல் என்ற நூலில் “ஸினிமாப் பாட்டு, பாலிடிக்ஸ், நாவல், பத்திரிக்கைகள் இவைதான் சின்ன வயஸிலிருந்தே எல்லாரையும் இழுக்கும்படியாக ஏற்பட்டிருக்கிறது” என்ரு எழுதுவதைக் கவனிக்கவும். cinema என்பதன் ஒலியை அப்படியே குறிக்க ஸினிமா என்றும் வடமொழிச் சொல்லான வயஸ் என்பதற்கும் அப்படியே ஸ் என்ற கிரந்த எழுத்தைப் புழங்குவதைக் கவனிக்கவும்.

இவ்வாறு தமிழுக்குரிய உச்சரிப்பின்படிப் பொன்னியின்ஜெல்வன் அல்லது பொன்னியிஞ்ஜெல்வன் என்று  மரபோடு சொல்லிப் பயன்பெறுவோமாக!

செம்மையான அறிவியல் நெறிப்படியான ஆய்வுகள் நடத்தும் SARII நிறுவனத்திற்கு நன்கொடை ஈக! https://www.sarii.org/gettinginvolved.html

Leave a comment