சங்கப் புலவர்கள் வெறும் புகழ்பாடிகள் அல்லர்!

இணையத்திலே ஒரு இலக்கியக்குழுவில் ஒருவர் சொல்லியது:
“From the time of Sankam Age till now what we are doing is praising others for money, fame, and selfishness.”

அன்பர்களே
மேற்கண்டவாறு பேசும்முன் சங்கப்புலவர்கள் பலர் தாம்சார்ந்த மன்னர் வழக்கத்துமாறான வாய்ப்புகளில் மானம் போன்ற காரணங்களால் செத்தால் அவரோடு செத்ததை மறக்கக்கூடாது.

இந்தச் செய்தியெல்லாம் கடந்த ஐம்பதாண்டுகளாகவே மறந்துபோயுள்ளனர் தமிழர்கள்.
காரணம் மொழியின் பெருமையில் வறட்டுச் சம்பம். மொழியின் இலக்கியம் சொல்லும் கருத்தில் அக்கறையும் அதில் சொல்லும் நிகழ்ச்சிகளில் பாடுபட்ட மாந்தரின் துன்பத்தை உணர்ந்து நடக்கும் எண்ணமும் இல்லாததே காரணம்.

போலி இலக்கியப்பேச்சாளர்கள் வெறும் நயமும் கோமாளிக் கோலமும் கொள்வதால் இது எங்கே புரியும்?

தன் உரு நிறம்கூடக் கிண்டல் என்று நினைக்கும் “பாப” இலக்கியப் பேச்சாளர்கள் இதை எப்படிப் பேசிப் பணம் ஈட்டுவார்கள்?
புறநானூறு படிக்கிறவர்கள் இதையெல்லாம் உணராமல் படிக்க முனைந்தால் வீண்தான்.

அடுத்து அப்படிப்பட்ட புலவர்களைக் காண்போம்:

[தமிழிணையப் பல்கலை தன் நூலகத்தில் நல்ல நூல்களைப் பழைய  நல்ல  உரையுடன் பொதித்தமைக்கு மிக்க நன்றி]

1. கோப்பெருஞ்சோழன் தன் மகன்கள் தவறாக நடந்ததால் அவர்களோடு போர்பொராமல் வடக்கிருந்து பட்டினிகிடந்து உயிர்நீத்தான். அப்பொழுது அவனோடு பல புலவர்கள் பட்டினி கிடந்து மெதுவாகச் சித்திரைவதைப்பட்டுச் செத்தார்கள்.
 பிசிராந்தையார்: இவர் பாண்டிநாட்டிலிருந்து அவனை வாழ்நாளிலே பாராமலேகூடத் தாமும் வடக்கிருந்தார்.
பொத்தியார்: இவருடையது இருப்பதிலேயே உருக்கமானது. சோழனின் அவைப்புலவர். சோழனோடு பட்டினிகிடக்க முனைந்தபொழுது அவரைத் தடுத்துக் குழந்தைபிறந்தபின் வா என்று சொல்லினான்; அவரும் குழந்தை பிறந்தபின்னர் வந்து இடம்தேர்ந்து உயிர்துறந்தார். இவர் என்னத்துக்காகப் பாராட்டுப்பாடிப் பச்சைக் குழந்தையையும் பெண்டாட்டியையும் விட்டுச் சாவார்? காண்க: http://www.tamilvu.org/slet/l1281/l1281pg2.jsp?x=47#220
 பூதநாதன்: இவர் கருவூர். அவரும் சோழன்பட்டினிகேட்டு ஓடி வந்து அவன் தன் வள்ளூரத்தை ( தசையை ) வாட்டிக் குற்றுயிராகக் கிடக்கும்பொழுது பார்த்து ஏன் என்னிடம் பேசாமல் இருக்கிறாய்? நான் மட்டும் வடக்கிருக்கும் பலரோடு முதலிலேயே உட்காராததால் கோபப்புலவியோ? என்று ஊடலாகக் கேட்கிறார். இதை இங்கே பார்க்கவும்.
* அங்கே “பலர் நின்குறியிருந்தோர்” என்று சொல்கிறார். எனவே நமக்குத் தெரிந்த இவர்களுக்கு இன்னும் மேலே பலர் செத்தது தெரிகிறது.
2. கபிலர் எத்தனை மன்னர்களைப் பாடியது தெரியும். சேரனிடம் கறிப்பிரியாணி தின்பதொன்றே தனக்குத் தெரியும் போர்தெரியாது என்று பாடினார்.ஆனால் பாரி செத்தபொழுது அவர் அவன் மகளிரை மணம் செய்ய முடியாமல் கோவலூரில் ஒப்படைத்துவிட்டுப் பட்டினி கிடந்து செத்தார்; இதை ஒருவரும் நினைப்பதுண்டா?. சிலர் அவர் தீக்குளித்ததாகச் சொல்வர். இவர் பதிற்றுப்பத்திலே சேரனிடம் பெறாத செல்வமா? பாரி கொடுக்காத நிதியா? கடைசியில் வெந்தோ வாடியோ சாகவாப் போலிப்பாராட்டுகள்?
3. பெருஞ்சேரலாதனோடு செத்தபலர்: கரிகாலனோடு போரில் முதுகில் ஈட்டி வெளிவரவும் அதற்கு நாணிப் பட்டினி கிடந்து செத்த பெருஞ்சேரலாதன் தெரியும். ஆனால் அவனோடு அந்தக் களத்தில் பலர் பட்டினி கிடந்து செத்தது அகநானூற்றுப் பாடல் 55ஆல் தெரிகிறது. அதை வாள்வடக்கு என்றும் சொல்வது அதன் பழைய நெகிழ்ச்சியான மரபையும் காட்டுகிறது.

” கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண் நாணிய சேர லாதன்
அழிகள மருங்கில் வாள்வடக் கிருந்தென
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனோடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகி யாங்கு” (அகநானூறு: 55: 10-15)
[ பெரும்பிறிது = சாவு]

இதற்குமேல் பேச என்ன இருக்கிறது?

* அவர்களுக்காக அழுவதைத் தவிரவும்
* அப்படியிருந்த நம் குடிக்கு இருக்கும் வலிமை நினைந்து விம்முவதைத் தவிரவும்
* இதை மறந்ததனால் இக்காலக்குடி துரோகம் பெருத்து எப்படி வலிமையிழந்திருக்கிறது என்று நோவதைத் தவிரவும்…
* இனியாவது மீண்டும் நினைந்தால் உருப்படத் தவறாது என்று நம்பிக்கை கொள்வதைத் தவிரவும்….

பெரியண்ணன் சந்திரசேகரன்