வள்ளுவர் சமணராயிருந்தால் என்ன குறை?

திருவள்ளுவர் சமணமதத்தார் என்பதனால் ஏன் நமக்குக் குறை வேண்டும்?

அந்தமதத்திற்கே உரிய ஆனால் எல்லாருக்கும் பொதுவாகப் பொருந்தாத கொள்கையை வற்புறுத்துவதைத்தான் குறையாக நினைக்கவேண்டும்.
கொல்லாமை புலாலுண்ணாமை இயன்றளவு நல்லதென்று தெரிந்ததே.
அதேபோல் இன்றும் நாம் மேலைநாட்டில் விளைந்த தனியுரிமை விடுதலை, அறிவியல், அறிவியல்நோக்கில் மொழியியல் பண்பாட்டு மரபாராய்ச்சி போன்ற மதங்களை  ஏற்றுப் பயன்பெறுகிறோம். எனவே நம்முள் ஒருவர் நல்லது சொல்லும்பொழுது ஓ இவர் மேலை மரபினர் என்று எண்ணி வருந்தினால் சிறக்குமா?

மேலும்  தமிழர்கள் ஏதோ இன்று இருப்பதுபோல் பண்டைநாளில் மதங்கள் இருந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் ஈராயிரம் ஆண்டுகள் முன்பு வெவ்வேறு கொள்கைகள் இருந்தன. பலர் ஒரே குடும்பத்தில் சமணம் ஆசீவகம் புத்தம் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுவார்கல். இதைச் சிலப்பதிகாரம் போன்றவற்றில் காணலாம். கோவலன் கண்ணகிக்குத் திருமணம் மாமுதுபார்ப்பான் மறைவழி காட்டிட நடத்திய பெற்றோர்களில் சிலர் கோவலன் இறந்ததும் வருந்திச் சமண மடத்தில் சேர்ந்தது தெரிந்ததே.

எனவே நாம் மதம் என்ற சொல் கேட்டவுடன் இன்றுபோல் நினைக்கக்கூடாது.

தமிழரில் பலர் எப்படியோ தாங்கள் சைவர் என்ற எண்ணம் கடந்த சில நூறாண்டுகள் பரவியதால் இந்த எண்ணம் நேர்ந்திருக்கலாம்.  சைவத்தீவிரவாதிகள் சிலப்பதிகாரத்தை அழிக்க முயன்றது தெரிந்ததே. சித்தமரபு நூல்களை அழிக்க முயன்றதும் தெரிந்ததே.

இன்றும் கூடச்  சிவத்தீட்சை பெற்றவர் சிலர் சிலப்பதிகாரம் திருக்குறள் எல்லாம் புறக்கணிப்பதைக்காணலாம்; அவர்கள் தமது சைவமரபைத் தொன்றுதொட்டு வேதிய மரபோடு சேர்ந்ததாக நினைப்பதுண்டு. ஆனால் இருக்குவேதம் இலிங்கத்துக்கு எதிரானது என்பதை இவரே அறியார்.
சிவன்கோயிலில் பூசாரிகளாக இருக்கும் வேதியமதத்தாரும் இதை மறந்தனர்.
அது நிற்க.

வள்ளுவரும் இளங்கோவும் சமணராக இருந்தும் கொல்லாமை புலால்மறுத்தலை மட்டுமே வற்புறுத்தித் தமிழ்ப்பண்பாட்டின் முழுக்கருவை மீறாமல் இலக்கியம் பாடியுள்ளனர்.

இளங்கோ ஒருபடிமேலே மிஞ்சித் தம்சமயத்தை முதலில் வற்புறுத்துவதுபோல் பாடிப் பின்னர் அதை மறுப்பதைக் கவுந்தியடிகள் வாயாகக் காணலாம்; சாரணர்கள் முன்னிலையில் அருகன் அல்லது வேறு யாருக்கும் ஐம்புலன்கள் பணிவோடு இணங்கா என்று பேசுவதையும் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப்படுத்தும்பொழுதும் பேசுவதையும் ஒப்பிட்டு வேறுபாட்டைக் காண்க; “இத்தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம்…”
அதுவும் நிற்க.
திருக்குறள் கடவுள்வாழ்த்தில் சொல்லும் கடவுட்குணங்களையும் கொல்லாமை புலால் மறுத்தல் ஆகியவற்றையும் பெரிய சான்றுகளாக வள்ளுவரின் சமண மரபிற்குக்கொள்வர். அதுபற்றிய மறுப்பை அறிந்தவர்கள் இங்கே தெரிவிப்பது பயனுள்ளதாகும்.

மற்றபடி வள்ளுவர் சமணக்கொள்கையைப் புகுத்த முயலவில்லை. தமிழரின் அடிப்படை மதமான அகப்பொருள் மீறாமல் காமத்துப்பாலைப் பாடியிருப்பது மிகச்சிற்பபு. மற்றும் மனிதனின் இரந்தே வாழவேண்டும் என்று மானத்தை மிஞ்சிய கடவுள் பரந்து கெடுக என்பதுவும் வாழ்வாங்கு வாழ்பவனே கடவுள் என்ற மதத்தையும் அவர் தெளிவாக ஓதுவதை மறக்கக்கூடாது,

திருக்குறளின் கொல்லாமையும் புலால்மறுப்புக் கொள்கையும் அது இயற்றிய காலக்கட்டத்திற்கு இருந்த தமிழர் மற்றும் இந்தியப்பொழிலில் வடபாலில் பரவியிருந்த ஆரியவேதியரின்  மதம் ஆகியவற்றின் கொள்கைக்கு வேறுபட்டது.  உயிர்ப்பலியையே அடிப்படையாகக் கொண்ட ஆரியவேள்விச் சமயம் (யாகம்) தமிழகத்திலும் அப்பொழுது பரவத் தலைப்பட்டதும் சங்கப்பாடல்களில் தெளிவு (அகநானூற்றில் ஆமையைத் தீயில் இடும் ஆரியவேள்விச் சடங்கு நேர்ச்சான்று).

திருமுருகாற்றுப்படையில் முருகனுக்கு ஆட்டுமறியை அறுத்துப் பலிகொடுக்கும் சடங்கு தெளிவாகப் பாடியுள்ளது.
“சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும்”  (திருமுருகாற்றுப்படை)
இங்கே அப்படிக்கொண்டாடும் விழாவைச் சீர்கெழு விழவு அதாவது பெருமைவாய்ந்த விழா என்று கூறுவதைக் கவனிக்கவும்.
இன்னும் மேலே அதே படலத்தில் நக்கீரர்
“மதவலிநிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி”
என்றும் பாடுகிறது.
[மிகுந்த வலிமை பெற்ற பருத்த காலடியை உடைய கொழுத்த விடையின் குருதியொடு விரவிய தூய வெள்ளரிசி]

பழைய உரைகாரர்களில் விடை என்பதற்குக் கிடாய் என்று நச்சினார்க்கினியரும், செம்மறிக்கிடாய் என்றும கவிப்பெருமாளும்,  ஆடு என்று பரிதி யென்பாரும் சொல்லுவர்’; ஆனால் பரிமேலழகர் யானைத்திரள் என்று பொருளுரைக்கின்றார்!

முன்பே சொல்லியதுபோல் ஆரியரின் வேள்விமதமும் எக்கச்செக்கமாக விலங்குகளைப் பலிகொடுப்படுப்பதையே சடங்காகக் கொண்டது. இதைச் சதபதப்பிராமணம் போன்ற வேள்விசடங்குமுறை நூல்களால் அறியலாம். பிராமணர்கள் பசுக்கறியை உண்பதைச் சிறந்த மரபாகக் கொண்டிருந்தது பலருக்கும் தெரியாது. இதை The Myth of the Holy Cow என்ற நூலில் இருந்து நுணுக்கமாகவும் விரிவாகவும் அறிந்துகொள்ளலாம்.

எனவே சமணர்கள் ஒருவர்தாம் கொல்லாமை புலால் உண்ணாமை ஆகியகோட்பாடுகளை அந்தக் காலகட்டத்தில் மேற்கொண்டிருந்தனர் என்பதைத் தெளியலாம். ஆகவே வள்ளுவர் சமணக்கொள்கையைக் கடைப்பிடித்தவராக இருக்கவே வாய்ப்புகள் உண்டு. அதில் யாரும் வருந்தவோ வெறுக்கவோ சான்றுகள் இல்லாமல் உணர்ச்சி அடிப்படையில் மறுக்கவோ தகாது.

Contribute: பங்களிப்பா? உதவியா?

இக்காலத்தில் தமிழர்கள் குழப்பும் இன்னொரு சொல் ஆங்கிலத்தின் contribute என்பது.

இப்பொழுது இந்தச்சொல்லை ஆங்கிலத்தில் முதலில் சிந்தித்துப் பழகியவர்களுக்கு நேரடிமொழி பெயர்ப்பான “பங்களிப்பு” என்பதே சொல்லவருகிறது.
ஆனால் இந்த ஆங்கிலச்சொல்லின் கருத்து உலக மக்களுக்குப் புதிய கருத்தில்லை.   என்ன சொல் தமிழர்கள் வழங்குகிறார்கள்?
உதவு“, “ஒத்தாசை செய்” என்பது பெரும்பாலும் இடங்களுக்குப் பொருந்தும். மற்ற இடங்களில் கொடுத்தல் அளித்தல் என்ற கருத்துப் பொருந்தும்.
“அவன் ஊர் நோன்பின் பொழுது ஒன்றும் உதவவில்லை”
“எங்கள் அணிக்கு அவனால் இது வரைக்கும் ஒரு உதவியும் இல்லை”
என்பதுண்டு.
எனவே “Please contribute to this convention by serving on the organizing committee” என்பதை
” ஏற்பாட்டுக் குழாத்தில் பணிபுரிந்து நீங்களும் இந்த மாநாட்டுக்கு ஏதாவது உதவுங்கள்” என்பது அந்த வழக்கம்.  ஆனால் “ஏற்பாடு செய்வதில்  நீங்களும் பங்களியுங்கள்” என்பது என்பது  ஆங்கிலப் பழக்கம்.

கொடுத்தல் என்ற பொருளில் குறிப்பிட்ட ஏதேனும் கொடுப்பதைச் சொல்ல வழங்கலாம். “அவர் நாங்கள் நிதி திரட்டும்பொழுது ஐயாயிரம் வெள்ளி கொடுத்தார்” என்பது
“He contributed $5000 during our fund raising” என்பதை உணர்த்தும்.

இந்த இரண்டாம் பொருளைப் பங்களிப்பு என்ற சொல் குறிக்கும். ஆயினும் அதில் பங்கு என்ற சொல் ஆங்கில வழக்கத்தை மேற்கொண்டதால் விளைந்தது. வழக்கமாகப் பேசுவதுபோல் கொடுப்பது, அளிப்பது என்றே சொல்லலாம்.

Participate: பங்கேற்பா? கலந்துகொள்வதா?

“… இலக்கியக் கூட்டத்தில் உங்களின் பங்கேற்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். ”
என்பதில் பங்கேற்பு என்று சொல்வதுஆங்கிலச்சொல்லை மொழிபெயர்ப்பதால் விளைந்தது.
திராவிடமொழிகளில் கலத்தல், சேர்தல் என்ற பொருளில் சொற்களை வழங்குவதுதான் தகும்.

முன்பெல்லாம்: “நீங்கள் கட்டாயம் இந்த விழாவில் கலந்து கொள்ளவேண்டும்“, “அவர் கூட்டத்தில் கலந்துகொண்டாரா”  என்றெல்லாம் பேசியது நமக்கு நினைப்பிருக்கும்.  நான் கேட்டு வளர்ந்த கொங்கு வழக்கில் பங்கேற்பு என்ற சொல்லைக் கேட்டதில்லை! பங்கேற்பு என்ற சொல்லைக் கேட்டவுடன் எனக்கே புதிதாக இருந்தது. அது ஒட்டவேஇல்லை.

சான்றாக: மன்னாதிமன்னன் என்ற படத்தில் கீழ்க்கண்ட இரண்டாம்  பாகத்தின் கட்டங்கடைசியில் (நேரம் 1:07:40) காவிரிவிழாவில் “கலந்துகொள்” என்று பலமுறை வெவ்வேறு ஆட்கள் பேசுவதைக் கவனிக்கவும்.
http://www.tamilpeek.com/watch.php?vid=624∂=3227

பங்கேற்பு என்ற சொல் தமிழில் இயற்கையாக வழங்கும் சொற்களை ஆங்கிலச்சொல்லைக் கேட்டவுடன் இணைக்க மறந்த எழுத்தாளர்களால் நேர்ந்ததாகும். இதுபோல் பல சொற்களும் சொல்வழக்கக் கோட்பாடுகளும் ஆங்கிலநெறியைத் தழுவியதால் ஏற்பட்டுள்ளன. அவற்றை இங்கே என்னுடைய மற்ற கட்டுரைகளில் காண்க.

Participate என்பதற்கு மற்ற திராவிடமொழிகளில் கூடக் கலத்தல், இணைதல் ஆகிய கருத்துகளில் சொற்கள் வழங்குவதற்குச் சான்றுகள் காணலாம்:

தெலுங்கில்கூட:  (http://dsal. uchicago. edu/cgi-bin/ romadict. pl?query= participate&table=brown )
எனயு ( < *எணையு = இணையு) என்ற சொல் வழங்குவதைக் காணலாம்:
enayu. [Tel.] v. n. & a. To seem, to resemble. To mingle. coalesce, unite. To accord. To associate, To participate in, enjoy, or suffer (as death.)

ஆங்கிலத்திலும் அந்தச் சொல்லுக்கு “to join in” என்ற பொருள் இருப்பதை http://en.wiktionary.org/wiki/participate என்ற கட்டுரையிற் காணலாம். எனவே ஆங்கிலத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஒரே சொல் வழங்குவதை உணராமல் நாம் அந்த ஒரு சொல்லின் நேரடிப்பொருளைமட்டுமே மொழிபெயர்க்கக்கூடாது.

கலிபோரினியாத் திரு.மு.மணிவண்ணன் தெரிவித்தது: பன்மொழிப்புலவர் கா அப்பாத்துரையார் தொகுத்த கழக ஆங்கிலத் தமிழ் அகராதியிலிருந்து (பேரா. அ. கி. மூர்த்தி திருத்திய பதிப்பு, 2002):

Participate (v): கலந்து கொள்

Participant (n): கலந்து கொள்பவர்

Participation (n): கலந்து கொள்ளல்

ஆக்ஸ்போர்டு ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதியிலிருந்து ( பேரா. முருகன், பேரா. ஜெயதேவன் 2009):

Participate (v): to take part or become involved in, ஒன்றில் பங்கு கொள், இணைவுறு, கலந்து கொள்

என்று மற்றவர்களும் கலந்துகொள் என்று சொல்லியிருப்பது யான் சொல்வதைத் திண்ணப்படுத்துகிறது.

எனவே நாம் கவனத்தோடு சிறிது சிந்தித்துப் பார்த்துச் சொற்களை வழங்குவது சிறக்கும்.

பங்கேற்பு என்பது மொழிச்சிதைவு என்ற நோக்கில் பிழையில்லை; செந்தமிழ்மொழிதான்.
ஆனால் மொழியின் சொல்வழக்கு மரபையும் சொற்பிறப்புக்கு அடிப்படையான பொருள்மரபையும் குலைக்கும் என்ற நோக்கில் அது சிறப்பில்லை. தமிழ்மொழி இப்பொழுதுள்ள தறுவாயில் இந்த மரபைக் குலைத்தால் மீளமுடியாத பெரியமாற்றம் நேரும் என்பதை நாம் கருதுவோமாக.

இந்த விழிப்புணர்வு இல்லையென்றால்:

  1. நம்மொழியின் சொற்கள் வழக்கொழிந்து தொலையும்.
  2. பல கருத்துகளுக்கு (இங்கே ஆங்கிலத்தில் participate என்ற கருத்திற்கு) அடிப்படைப் பொருள் என்னவென்றே தெரியாமல் போகும். இது அடிப்படைக் கெடுதல் செய்யும்.
  3. அதன் விளைவாகத் தமிழ்மொழியின் தொடர்ச்சி தொலையும். புதுத்தலைமுறையாக ஒரு மொழி பெருகிப் “பழைய” மொழியின் சொற்களுக்குப் பொருள் விளங்காமல் போகும் பெருத்தகேடு உள்ளது.சங்க இலக்கியத்திற்கும் மற்றவற்றிற்கும் இது ஒரு பெரிய வேறுபாடாகும். (ஆடு = வெற்றி, நகர் = வீடு, கோயில் போன்றவை எடுத்துக்காட்டுகள்)
  4. தமிழ்மொழியில் புதுச்சொற்கள் வழங்க அடிப்படைக் கருவூலம் என்பதுவும் ஊற்று என்பதுவும் தொலையும்.
  5. ஆங்கிலேயர் சிந்தனையை மொழிபெயர்ப்பதாகத்தான் இருக்கும். தமக்கே உரிய நினைப்பு என்பது இல்லாமல் போகும்.

“எனவே சென்ற இலக்கியக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்….இன்னின்னார்…” என்று சொல்க!

தமிழ்ச்செய்யுளில் து என்ற உருபைப் புரிந்துகொள்ள

இங்கே தமிழ்ச்செய்யுள்களில் அடிக்க்டி வழங்கும் து என்ற விகுதிபற்றிய விளக்கம் சொல்லுகிறேன். இதை அறிந்தால் செய்யுள்களை எளீதில் பழக வாய்க்கும்.
  • து என்ற உருபுச்சொல் அதற்கு முன் ஒரு பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து நின்று சேர்க்கை, உடையது, சேர்ந்தது, உள்ளது என்ற பொருளில் வழங்கும்.
    1. “ஆதிபகவன் முதற்றே உலகு” என்பதில் முதற்று என்பது முதல் + து: முதல் உடையது. ஆகவே “உலகு ஆதிபகவனை முதலாக (தலைமையாக) உடையதே” என்று பொருள்.
    2. முந்நூறு ஊர்த்து” என்பதில் “முந்நூறு ஊருடையது” என்றுபொருள்.
    3. அது தன்னைச்சேர்த்து வரும் சொல்லில் இறுதிஓசையைப் பொறுத்துப் புணர்ச்சியினால் டகரம், (ள் + து, ண் + து)  றகரமாகவும் (ல் + து, ன் + து) ஒலிக்கும்.பொருட்டு, கட்டு, பாற்று என்று ஒலிக்கும்.
    4. இன்றும் அது பலசொற்களில் புதைந்து வழங்குகிறது. பொருட்டு என்பதில் “பொருள் + து” என்பது அமைப்பு. “இது ஒரு பொருட்டு இல்லை” என்றால் “இது ஒரு பெரிய பொருள் உடையது இல்லை” என்று பொருள்.
    5. புறப்பாட்டு 32 “அவன் நாடு … கொண்ட குடுமித்து” என்ற சொல்லை வழங்குகிறது. அங்கே “குடுமி உடையது” அதாவது “நினைத்த முடிவை உடையது” என்ற பொருளில் வழங்குகிறது.
    6. புறப்பாட்டு 33 (கானுறை வாழ்க்கை)இல் “செம்மற்று அம்ம நின் வெம்முனை இருக்கை” என்பதில் செம்மற்று என்ற சொல்லைச் செம் (=செம்மை)+ அற்று (=அத்தன்மைத்து) என்று சிலரால் சொல்லியுள்ளது. ஆனால் அங்கே செம்மல் + து என்பதுதான் பொருந்தும். “நின் வெம்முனை வாழ்க்கை செம்மல் உடையது ” என்று அங்கே பொருளாகும்.
    7. திருக்குறளில் “தன்கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை” என்பதில் “தன் கையில் உள்ளதாக ஒன்று இருக்கச் செய்பவன் வினை”
    8. திருக்குறளின் காமத்துப்பாலில் “பெண்தகையாள் பேரமர்க் கட்டு” என்பதில் “கண் + து” = கட்டு எனவாகும். கண்ணில் உள்ளது, கண்ணோடு சேர்ந்தது எனப்பொருள்.
    9. “தான் அமிழ்தம் என்று உணரற் பாற்று” என்பதில் “பாற்று = பால் + து’ என்று பகுக்கும். அங்கே அதன்பொருள்: பால் அதாவது தொகுப்பைச் சேர்ந்தது என்பதாகும்.  அதாவது “[மழை] அமிழ்தம் என்று உணர வேண்டிய தொகுப்பைச் சேர்ந்தது” என்று .
    10. பல பழஞ்செய்யுள்களில் “நீர்த்து” = “நீர்மை உடையது” (நீர் = குணம் என்று பொருள்) என்பது வாடிக்கையாகும். புறநானூறு ஒன்றில் சோழன் தாமப்பல்கண்ணனாரைத் தப்பாகப் பேசியதற்கு “நீர்த்தோ நினக்கென வெறுப்பக்கூறி”  என்று பாடுவார். அதற்கு “நல்ல குணமுடையதோ நினக்கு என வெறுப்பச் சொல்லி” எனப் பொருள்.
  • எனவே இந்த அமைப்பைப் புரிந்து கொண்டால் பழஞ்செய்யுட்களை விளங்கிப் பயிலலாம்.

    பெரி. சந்திரசேகரன்.